திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.11 நமச்சிவாயப் பதிகம்
பண் - காந்தார பஞ்சமம்
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.
1
பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
ஆவினனுக் கருங்கலம் அரனஞ் சாடுதல்
கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது
நாவினுக் கருங்கலம் நமச்சி வாயவே.
2
விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்
பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை
நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே.
3
இடுக்கண்பட் டிருக்கினும் இரந்து யாரையும்
விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம்
அடுக்கற்கீழ்க் கிடக்கினு மருளின் நாம்உற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே.
4
வெந்தநீ றருங்கலம் விரதிகட்கு எலாம்
அந்தணர்க் கருங்கலம் அருமறை ஆறங்கம்
திங்களுக் கருங்கலந் திகழும் நீள்முடி
நங்களுக் கருங்கலம் நமச்சி வாயவே.
5
சலமிலன் சங்கரன் சார்ந்தார்க்கு அலால்
நலமிலன் நாடொறும் நல்குவான் நலன்
குலமில ராகிலுங் குலத்திற் கேற்பவோர்
நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே.
6
வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினார் அந்நெறி கூடிச் சென்றலும்
ஓடினே னோடிச்சென் றுரவங் காண்டலும்
நாடினேன் நாடிற்று நமச்சி வாயவே.
7
இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.
8
முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்
தன்னெறி யேசர ணாதல் திண்ணமே
அந்நெறி யேசென்றங் கடைந்தவர்க்கு எல்லாம்
நன்னெறி யாவது நமச்சி வாயவே.
9
மாப்பிணை தழுவிய மாதோர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைத்தொழ
நாப்பிணை தழுவிய நமச்சிவாயப் பத்து
யேத்தவல் லார்தமக் கிடுக்க ணில்லையே.
10
இது சமணர்கள் கல்லில் கட்டிக் கடலில் வீழ்த்தினபோது ஓதியருளியது.
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com